திட்டமிட்டு சின்னம் பறிப்பு!..எனக்கு அநீதி இழைக்கப்பட்டது அனைவருக்கும் தெரிய வேண்டும் - சீமான்
நாம் தமிழர் கட்சிக்கு விவசாய சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டதை மக்களுக்கு தெரியப்படுத்துவேன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார்.
சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக பரிந்துரை செய்வதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்ததாக கூறினார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவேன் எனக் கூறிய சீமான், தமக்கு இழைக்கப்பட்ட அநீதி அனைவருக்கும் தெரிய வேண்டும் எனவும் கூறினார்.
அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. சின்னம் கேட்டு பாரதிய ஐக்கியதாக கட்சி சார்பில் முதலில் மனு கொடுத்ததாக கூறுவதை ஏற்கிறேன். அதேநேரம் தேர்தல் ஆணையம் கொடுத்த கால அளவுக்குள் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு எத்தனை மனுக்கள் வந்துள்ளன என்பதை ஆராய்ந்த பின்னர் முன்னுரிமை அடிப்படையில் சின்னத்தை ஒதுக்குவதே அறம். அந்த வகையில் 7% வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு சின்னத்தை ஒதுக்கி இருக்க வேண்டும் என்றார்.
புதிதாக யாரும் தேர்தலுக்கு வரக் கூடாது என நினைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன். 8% வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள். 7 சதவீதத்தில் இருந்து 8% பெறுவதற்குள் சின்னத்தை பறிப்பதால் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டி உள்ளது என்றார்.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும், நான் ஒரு வேளாண் குடிமகன் என்பதாலும் கரும்பு விவசாயி சின்னத்திற்காக போராடுகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் என்று கேட்டு மக்கள் வாக்களிப்பார்கள் எனவும் சீமான் தெரிவித்தார்.
What's Your Reaction?