விவசாயிகளை அழிக்க வந்தது யார்? ஸ்டாலின் Vs இபிஎஸ்...அனல் பறந்த பரப்புரை

Apr 7, 2024 - 00:56
விவசாயிகளை அழிக்க வந்தது யார்? ஸ்டாலின் Vs இபிஎஸ்...அனல் பறந்த பரப்புரை

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை பழனிச்சாமி ஆதரித்துவிட்டு பச்சைதுண்டு போட்டு பச்சை பொய்களை கூறுகிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்டா மாவட்ட மக்களை அழிக்க முற்பட்டது திமுக அரசு என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சனிக்கிழமை சிதம்பரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி விவசாயி இல்லை விவசாயிகளை அழிக்க நினைத்த விசவாயு என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

தஞ்சாவூரில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பி.சிவநேசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது, "திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள்?. இந்தியாவிலேயே வறட்சிக்கு முதல் முறையாக நிவாரணம் கொடுத்தது அதிமுக அரசு. விவசாயிகளை கண்ணை இமை காப்பது போல் காத்தது அதிமுக. எதிர்க்கட்சியாக இருக்கும்போது GO BACK MODI மோடி என்று கூறிவிட்டு ஆட்சியில் அமர்ந்தவுடன் ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க WELCOME MODI என ரத்தினக் கம்பளம் விரித்து அழைக்கிறார்கள்" என விமர்சித்தார். 

மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஸ்டாலின் முன்னிலையில் மீத்தேன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. டெல்டா மாவட்ட மக்களை அழிக்க முற்பட்டது திமுக அரசு" என்று கூறிவிட்டு மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அளித்த பேட்டியை மக்கள் முன்பு ஒளிபரப்பிக் காட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், "மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசு வாய் பொத்தி மெளனமாக இருக்கிறது. ஏனென்றால் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்றி விடுவார்கள் என்ற பயம். 3 ஆண்டு கால ஆட்சியில் திமுகவை மக்கள் வெறுத்துவிட்டார்கள். அதனை மறைப்பதற்கு இந்தியா கூட்டணி என்ற போர்வையில் முதலமைச்சர் ஸ்டாலின்பேசி வருகிறார். வரிமேல் வரி போட்டு மக்களை பாதிக்கக் கூடிய அரசு திமுக. இதற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்" என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow