நீட் இருக்கா இல்லையா... EWS வசதி எல்லா சமூகத்துக்குமா? காங்கிரசின் குழப்ப வாக்குறுதிகள்...

நீட் தேர்வு - பொருளாதார நலிவடைந்த சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்டு பல்வேறு விவகாரங்களில் தெளிவற்ற அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டு இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.

Apr 5, 2024 - 15:53
நீட் இருக்கா இல்லையா... EWS வசதி எல்லா சமூகத்துக்குமா? காங்கிரசின் குழப்ப வாக்குறுதிகள்...

நீட், CUET போன்ற மத்திய அரசின் தகுதித்தேர்வுகளின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகளை விருப்பத்தின்பேரில் நடத்திக்கொள்ளலாம் அல்லது மாநிலஅரசு தங்கள் தரநிலையுடன் சொந்தத் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில், தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படுமா இல்லையா என தெளிவான ஒரு வாக்குறுதி இதில் இல்லை என விமர்சனம் எழுந்துள்ளது. இதேபோல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆக ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வந்தநிலையில், ரத்து செய்யப்படும் என ஏன் அறிவிக்கவில்லை எனவும் கேள்வியெழுந்துள்ளது.

கல்வி - வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது அனைத்து சமூகத்தினருக்கும் செயல்படுத்தப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்சாதி ஏழைகளுக்காகு மட்டுமே இச்சலுகை என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் வங்கியில் வரவு வைக்காமல் லட்சகணக்கில் வருமானம் ஈட்டும், பலர் தாங்கள் வருமைகோட்டுக்கு கீழ் உள்ளதாக கூறி இந்த சலுகையை பெற வாய்ப்பு இருக்கும் நிலையில், அனைவருக்கும் சமமான உரிமையாக இது அமையுமா எனவும் கேள்வியெழுந்துள்ளது.

அடுத்ததாக மகாலட்சுமி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஏழைக்குடும்பத்தின் மூத்த பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மகளிர் உரிமைத்திட்டத்தின் நீட்சியாக இது பார்க்கப்படும் போதும், அதில் நிலவிய நடைமுறை சிக்கல்களைப் போலவே இதற்கும் தீர்வளிக்கப்படவில்லை. அதாவது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது, குறிப்பிட்ட அளவுக்குமேல் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டும் தினக்கூலிகளுக்கே ரூ.1000 மாதந்தோறும் வழங்க சிக்கல்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர ஜிஎஸ்டியை மத்தியஅரசு கொண்டுவந்தபோது அதனை முற்றிலும் விமர்சித்த காங்கிரஸ், தற்போது ஜிஎஸ்டி 2.o என புதியதாக கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இதிலும் ரத்து என்ற முடிவைத் தாண்டி புதிதாக ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. உயர்நீதிமன்ற - உச்சநீதிமன்ற நீதிபதிகளாக SC,ST,OBC-யைச் சேர்ந்த பெண்கள் அதிகமாக நியமிக்கப்படுவர் உள்ளிட்ட தன் அதிகாரத்துக்கு சாத்தியமில்லாத தெளிவற்ற அறிவிப்பையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

கல்விக்கடன் ரத்து, 12ம் வகுப்பு வரை இலவசக்கல்வி என பல்வேறு முக்கிய அறிவிப்புகள் உள்ளபோதும், இதுபோன்ற தெளிவற்ற வாக்குறுதிகளும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow