ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் எதற்கு? - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அதனை அவரது குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள குடோன் ஒன்றில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்தக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் 9-ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே. சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், வீட்டிற்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஏப்ரல்-5) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சீல் வைத்த வீட்டை அவரது குடும்பத்தினர் பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சீல் வைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டை அவரது குடும்பத்தினர் பயன்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
What's Your Reaction?