நெல்லை மேயர் விவகாரம்-கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து சென்ற திமுக நிர்வாகிகள்

மேயரை ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மாற்றக்கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Jan 11, 2024 - 18:36
நெல்லை மேயர் விவகாரம்-கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து சென்ற திமுக நிர்வாகிகள்

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் நெல்லை மேயரை காப்பாற்ற கவுன்சிலர்களை இன்ப சுற்றுலா அழைத்து சென்ற திமுக நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்புக்கு எதிராக மேயர் செயல்பட்டது. நிதி ஒதுக்குவதில் மேயர் பாரபட்சம் காட்டியது உட்பட மோதலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. மேயரை மாற்றக்கோரி ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்து மனு அளிக்கும் அளவுக்கு பிரச்சனை பெரிதானது. 

எனவே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவை கவுன்சிலர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் மேயர் மீது திமுக கவுன்சிலர்கள் சுமார் 38 பேர் அதிரடியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். 

இதையடுத்து கவுன்சிலர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் 12ம் தேதி( நாளை ) வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவரா் அறிவித்திருந்தார். இதனால் திமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பிரச்சனைக்குரிய கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். சமீபத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கவுன்சிலர்கள் மற்றும் மேயர் துணை மேயரை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மேயரை முதல்வர் நியமித்துள்ளார். எனவே அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.  வாக்கெடுப்பில் யாரும் கலந்து கொள்ள கூடாது. மீறி கலந்து கொண்டால் கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எச்சரித்து இருந்தார். அமைச்சரின் எச்சரிக்கையை தொடர்ந்து தீர்மானத்தை கொண்டு வந்த கவுன்சிலர்களே தற்போது கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

இந்த நிலையில், கவுன்சிலர்களை தற்போது வெளியூர்களுக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக கவுன்சிலர்கள் சுமார் 25 பேர் நேற்று கேரளாவுக்கு சுற்றுலா செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள கவுன்சிலர்கள் இன்று கன்னியாகுமரி மற்றும் விருதுநகருக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுக கவுன்சிலர் பவுல்ராஜ் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தற்போதைய மாவட்ட செயலாளர் மைதீன் கான் ஆகியோர் பொறுப்பில் கவுன்சிலர்கள் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆளுங்கட்சியால் நியமிக்கப்பட்ட மேயரை ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மாற்றக்கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இது போன்ற சூழ்நிலையில் இந்த தீர்மானத்தை தோல்வியடையச் செய்ய ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow