தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்: அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் என தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணி மட்டும் தமிழகத்தில் இறுதியாகி உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிகவின் நிலைப்பாடுகள் இன்னும் தெரியவில்லை.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கடந்த வாரம் அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர். டிச 2-ம் தேதி காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்து, தாங்கள் போட்டியிட விரும்பு தொகுதி பட்டியலை ஸ்டாலினிடம் வழங்கியது. இதை தொடர்ந்து கடந்த 2 தினங்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மா.கம்யூ கட்சி பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தனிதனியே ஆலோசனை நடத்தினர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் மது ஒழிப்பு நடைபயணத்தை மேற்கொள்ள இருக்கும் வைகோ, அதனை தொடங்கி வைக்க ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கியதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று நிலம் இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி முதலமைச்சரிடம் பெ.சண்முகம் மனு அளிக்க சந்தித்தாக மா.கம்யூ கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

