வேடந்தாங்கல் பறவை.. மோடியை விமர்சித்த முதல்வர்.. நிர்மலா சீதாராமன் கொடுத்த தரமான பதிலடி
பிரதமர் மோடியை வேடந்தாங்கல் பறவை என விமர்சித்த முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ஓசூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் " வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருவதுபோல பிரதமர் சீசன் காலத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அந்த வார்த்தையை பயன்படுத்துவதே தவறு.
தமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறை வரும்போதும் கருப்புக் கொடி காட்டும் திமுக, மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கும் தொழில் தொடர்பான திட்டங்களை கொண்டுவரும் போது வசூல் செய்ய மட்டும் வந்து விடுகிறது. இப்படி வசூல் செய்பவர்களை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மதுவால் எத்தனை குடும்பங்கள் துன்பப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக போதைப் பொருட்களை கூட இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்குகிறார்கள்.
போதைப்பொருள் விவகாரத்தில் அந்த குடும்பத்துக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் உள்ளது. வழக்கில் கைதான ஜாபர் சாதிக் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளார். போதைப்பொருள் வழியாக கோடிக்கணக்கில் சம்பாதித்து தங்களது குடும்பம் வாழ வேண்டும் என பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட ஆதாயம் வழியாக பிழைக்கும் எந்த குடும்பமும் வாழ்ந்ததில்லை. இப்படி ஆதாயம் பெற்று அரசியல் செய்யும் குடும்பத்தை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும். இந்த குடும்பத்தையே நிற்க வைத்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
நம் குடும்பத்தில் உதயம் இல்லாமல் இருட்டை எடுத்து வரும் திமுகவை புறக்கணிக்க வேண்டும். 10 ஆண்டுகளில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்" என தெரிவித்தார்
What's Your Reaction?