டிச.17க்குள் எண்ணெய் அகற்றும் பணியை முடிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தாமதம் ஆக காரணமானவர்கள் மீது கடுமையாக அபராதம் விதிக்கப்படும் என்றும், படகுகள், ஆட்களை அதிகப்படுத்தி விரைவாக பணியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
 
                                வெள்ள நீரில் கலந்த 7260 லிட்டர் கச்சா எண்ணெய் அகற்றப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் எண்ணெய் அகற்றும் பணிகளை முடித்து, டிசம்பர் 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எண்ணூர் பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, CPCL நிறுவனம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் எவ்வளவு எண்ணெய் வெளியேறியது, எப்படி கலந்தது, 48 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்ட நிலையில், அதில் எண்ணெய் எவ்வளவு, தண்ணீர் எவ்வளவு என்ற விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அதன்படி பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், எண்ணெய் கசிவு எப்படி நடந்தது என்பது தொடர்பான முழுமையான விசாரணை நடந்து வருவதாகவும், பல்லுயிர் தாக்கம் மற்றும் பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அறிவியல் ரீதியிலான தூய்மை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 625 மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் தடுப்பாண்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், எண்ணெய் அகற்றும் பணி மிக வேகமாக நடத்தப்பட்டு வருகிறது என்றும், 33 டேங்கர்கள் மூலம் இதுவரை 7260 லிட்டர் எண்ணெய் எடுக்கப்பட்டு, கும்மிடிபூண்டி பகுதியில் உள்ள பயோ ரெமெடியேசன் மையத்திற்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த எண்ணெய் கசிவு 20 டன் அளவிற்கு மணலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், எண்ணெய் அள்ளும் பணியில் 75 படகுகள், 4 ஜேசிபி பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எண்ணெய் அகற்றி இயல்பு நிலைக்கு மீட்கும் நடவடிக்கைக்கு யார் அறிவியல் ரீதியிலான ஆலோசனை வழங்கினாலும் ஏற்பதற்கு தயாராக உள்ளதாகவும், தனி நபராக ஒருவர் மனு தாக்கல் செய்து மெத்தனமான அறிவியல் ரீதியிலான நடவடிக்கையை கேள்விக்குறியாக்குவதை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள், எண்ணெய் பரவாமல் தடுப்புகள் அமைத்தது மட்டுமே திருப்தி அளிக்காது என்றும், எண்ணெய் அகற்றும் பணிகள் துரிதப்படுத்த வேண்டும் என்றும், தற்போது வரையில் அகற்றப்பட்டதாக சொல்லப்படும் எண்ணெய் அளவு உள்ளிட்டவை திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்தனர்.
எண்ணெய் படர்ந்த பகுதிகளை கணக்கிடுவது, அறிவியல் பூர்வமாக பிரித்து எடுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, அதன்பின்னர் தண்ணீரில் ஏற்படும் நச்சுத்தன்மையை சரி செய்வது போன்றவை குறித்து தெரிந்து கொள்வதற்காக சென்னை ஐஐடி-யிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது உறுப்பினர்கள் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்கிம்பர்களை பயன்படுத்தவில்லை, ஏன் போதுமான எண்ணெய் உறிஞ்சும் மற்றும் அகற்றும் உபகரணங்களை பயன்படுத்தவில்லை என கேள்வி எழுப்பியபோது, எண்ணெய் அதிகம் தேங்கி உள்ள ஒரு கிலோ மீட்டர் பகுதிகளில் எண்ணெய் உறிஞ்சும் அட்டைகள் கொண்டு எண்ணெய் அகற்றப்படுகிறது, மீதமுள்ள 10 கிலோமீட்டர் பகுதியில் மிக குறைவான அளவில் தண்ணீரில் எண்ணெய் கலந்துள்ளதால் அதனை எண்ணெய் உறிஞ்சும் அட்டை மூலம் அகற்ற முடியாது என்றும், மாற்று உபகரணங்கள் கொண்டு அகற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (டிச 17) எண்ணெய் அகற்றும் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்படும் என்றும், எண்ணெய் முழுவதுமாக அகற்றுவதற்கு 20 ஆம் தேதி வரை அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மீனவர்கள் தரப்பில் முறையான பயிற்சி பெற்றவர்களை கொண்டு எண்ணெய் அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும், ஆனால் கூலிக்கு ஆள் பிடிப்பது போல மீனவர்களை பயன்படுத்தி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியமர்த்தப்படுகின்றனர், எண்ணெய் அகற்றப்படுவதில் அரசாங்கமும், நிறுவனங்களும் மனித தன்மையோடாவது நடந்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்க முடியவில்லை என்றால் மீனவர்கள் கையில் பிளாஸ்டிக் கோப்பை கொடுத்து எண்ணெய் அள்ள சொல்வதற்கு பதிலாக, CPCL அதிகாரிகள் கையில் கொடுத்து எண்ணெய் அள்ளட்டும் என கடுமையாக குற்றம்சாட்டப்பட்டது.
அரசு தரப்பில் நாங்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என மீனவர்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், அரசு எண்ணெய் அகற்றும் பணியை முறையாக செய்து வருகிறது என்பதால், வழக்கு தொடுத்தவரை திருப்திப்படுத்த வேலை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் மீனவர்களை எண்ணெய் அள்ளவதற்கு அழைக்கவில்லை அவர்களே தாமாக முன்வந்து ஈடுபடுகின்றனர் என்றும், தேவைப்படும் நபர்களை முறையான உபகரணங்கள் கொடுத்து சேர்த்து கொள்கிறோம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. உபகரணங்கள் கொடுத்தாலும் மீனவர்கள் அதனை பயன்படுத்துவது இல்லை, போதுமான பாதுகாப்பு அம்சங்களுடன் தான் பணி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள் எண்ணெய் பரவல் முழுமையாக தடுக்கப்படவில்லை, எண்ணெய் உறிஞ்சும் அட்டைகளையும், பூமர்களையும் சரியான நேரத்தில், போதுமான அளவில், தேவையான இடங்களில் பயன்படுத்தவில்லை என குற்றம்சாட்டினர். CPCL தரப்பில் எண்ணெய் பரவல் உள்ள பகுதியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், முகத்துவாரம் முழுவதுமாக தடுப்புகளால் மூடப்படவில்லை என ஏன் அரசும் CPCLலும் தெரிவிக்கவில்லை என தீர்ப்பாய உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். தாமதம் ஆக காரணமானவர்கள் மீது கடுமையாக அபராதம் விதிக்கப்படும் என்றும், படகுகள், ஆட்களை அதிகப்படுத்தி விரைவாக பணியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
பின்னர் தீர்ப்பாய உறுப்பினர்கள் ஒரு எண்ணெய் உறிஞ்சும் அட்டை 15 நிமிடங்களில் உறிஞ்சக்கூடிய நிலையில், இத்தனை நாட்களில் எத்தனை அட்டைகளை பயன்படுத்தி இருக்கலாம் என்றும், CPCL இதனை செய்ய தவறியது ஏன்? என் புரியவில்லை என வியப்பை வெளிப்படுத்தினர். மீனவர்கள் எண்ணெய் அகற்றும் பணியில் உள்ள போது மணலியில் தொழிற்சாலைகளில் உள்ள சங்கத்தினர் எவரும் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது என தெரிவித்த தீர்ப்பாயம், டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் எண்ணெய் அகற்றும் பணிகளை முடித்து, டிசம்பர் 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            