குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி கருக்கா வினோத் அறிவுரை கழகத்தில் ஆஜர்
குண்டர் சட்டம் போடப்பட்ட ரவுடி கருக்கா வினோத் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி கருக்கா வினோத் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் கடந்த அக்டோபர் 25ம் தேதி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதனைப் பற்ற வைத்து கடந்த ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசினார். இதையடுத்து அங்கு இருந்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கருக்கா வினோத்தை கைது செய்து, கிண்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக காவல்துறை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் அண்மையில் ஒப்படைத்தது.
இந்நிலையில், கிண்டியில் (டிச 09) உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வான் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடுத்தகட்டமாக, ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பூவிருந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த மனுவில் அன்று பணியில் இருந்த காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என பலரையும் விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 25ம் தேதி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதையடுத்து அவர்மீது போடப்பட்ட குண்டர் சட்டம் அவசரகதியில் போடப்பட்டதா? உரிய காரணங்களின் அடிப்படையில் போடப்பட்டதா? என விசாரணை செய்யும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில், குண்டர் சட்டம் போடப்பட்ட ரவுடி கருக்கா வினோத் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
What's Your Reaction?