பழைய ஓய்வூதிய திட்ட அமல் மனு... தமிழக நிதித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக நிதித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "நான் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன். 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுத்துறைகளில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் , புதிய பென்ஷன் திட்டமே பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், 1978 திருத்தம் மேற்கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினர். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் , பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகிய அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பறித்துவிட்டனர்."
"எனவே தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், 1978 மற்றும் தமிழ்நாடு பொது வருங்கால வைப்பு நிதி விதிகளில் மேற்கொண்ட திருத்தத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?