டெல்லி சென்ற பிரேமலதா விஜயகாந்த்.. மு.க.ஸ்டாலின், உதயநிதி மீது சரமாரி குற்றச்சாட்டு

May 8, 2024 - 20:35
டெல்லி சென்ற பிரேமலதா விஜயகாந்த்.. மு.க.ஸ்டாலின், உதயநிதி மீது சரமாரி குற்றச்சாட்டு

3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக  இருப்பதாக கூறும் முதலமைச்சர், இதை அவர் நேரில் சென்று பார்த்தாரா? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு மத்திய அரசால் வழங்கப்படும் பத்மபூஷன் விருது நாளை (09-05-2024) டெல்லியில் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிரேமலதா டெல்லி புறப்பட்டபோது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாளை பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்டு, வரும் 10-ம் தேதி டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒருபுறம் தண்ணீர் பற்றாக்குறை, மறுபுறம் பலத்த காற்றால் நெற்பயிர்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளது. 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். இதை என்ன அவர் நேரில் சென்று பார்த்தாரா? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும், ஏழையின் சிரிப்பு விவசாயிகள் தான். ஆனால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த விவசாயிகளும் வறுமையில் உள்ளனர்.

பத்திரப்பதிவு சேவை வரி யாரிடமும் அறிவிக்காமல் உயர்த்தப்பட்டுள்ளது. வரி என்பது மக்களுக்கு வலி இல்லாமல் இருக்க வேண்டும். சொத்து வரி, பால் விலை, பேருந்து கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. நீட் விலக்கிற்காக 50 லட்சம் கையெழுத்தை பெற்று விட்டதாக கூறிய அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வை ரத்து செய்து விட்டாரா? வெறும் அரசியலுக்காக வாக்குறுதிகளை  கொடுக்கின்றனர்.

விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே பத்மபூஷன் விருது கொடுக்காமல் இருந்தது வலிதான். அவர் இருக்கும்போதே வாங்கி இருந்தால் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பெருமையாக இருந்திருக்கும். இந்தியாவின் அனைத்து விருதுகளையும் பெறக்கூடிய தகுதி வாய்ந்தவர் விஜயகாந்த். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டால் ஒட்டுமொத்த மக்களுக்காக சமர்ப்பிப்போம்" என பிரேமலதா தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow