தேங்காய் ஓட்டம், கொடி ஆட்டம்... ராபர்ட் புரூஸ் பரப்புரையில் சுவாரஸ்யம்...
பரப்புரையின்போது உடைக்கப்பட்ட தேங்காய்களை பெண்கள் முண்டியடித்துக்கொண்டு எடுத்துச் சென்றது, வேட்பாளர் வருகைக்காக கொடியுடன் காத்திருந்த மூதாட்டி.
நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் பரப்புரையின்போது, உடைக்கப்பட்ட தேங்காய்களை பெண்கள் முண்டியடித்துக்கொண்டு எடுத்துச் சென்றது, வேட்பாளர் வருகைக்காக கொடியுடன் ஒரு மூதாட்டி வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தது ஆகிய சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின.
2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதமாக தங்கள் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் I.N.D.I.A. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் தனது பரப்புரையை வண்ணாரப்பேட்டையில் விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்துத் தொடங்கினார். கோயில் வாசலில் 108 தேங்காய்களை கட்சி தொண்டர்கள் இரண்டு பேர் உடைத்தனர். அப்போது உடைக்கப்பட்ட தேங்காய்களை, பரப்புரையை காணச் சென்ற பெண்கள் முண்டியடித்துக் கொண்டு எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வருவதற்கு சற்று காலதாமதாகவே, பரப்புரைக்கு பேக்கேஜ் பேசி அழைத்து வரப்பட்ட பெண்களில் ஒரு மூதாட்டி, தனது கைகளில் கட்சியின் கொடியை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை கொடி தொலைந்துவிட்டால் தனக்குக் கிடைக்க வேண்டுய பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் இறுகப் பிடித்து வேட்பாளார் எப்போது வருவார் என்று வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்.
இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கையுடன் நகைத்தவாறே பார்த்துச் சென்றனர். அதோடு உடனிருந்த தொண்டர்களும் அவரைக் கண்டு சிரித்த நிகழ்வுகளும் அரங்கேறியது. இவ்வாறாக ராபர்ட் ப்ரூஸ் வருகைக்கு முன்பும் பின்பும் என அப்பகுதி மக்களின் அட்ராசிட்டி, அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
What's Your Reaction?