கோயில் நில மோசடி... காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனுக்கு காப்பு!

போலி ஆவணங்கள் தயாரித்து காரைக்காலில் உள்ள கோயில் நிலத்தை மோசடி செய்த வழக்கில் சப் கலெக்டர் ஜான்சனை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிலத்தை ஆட்டையைப் போட அதிகாரிகள், அரசியல்வாதிகள் என கூட்டுச் சேர்ந்து மோசடி அரங்கேற்றியது குறித்து பார்ப்போம்..

Oct 11, 2024 - 12:49
கோயில் நில மோசடி... காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனுக்கு காப்பு!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து வருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.  கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தை  பொலிவுறு நகர திட்டத்திற்காக சுற்றுலாத் துறைக்கும், இந்திய எரிவாயு ஆணையத்திற்கும் வழங்குவது ஒரு போலியான அரசாணை சமூக வலை தளங்களில் பரவியது. 

அந்த போலி அரசாணையில் தனது கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தி இருப்பதாகக் கூறி காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன், நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தச்சூழலில், நில மோசடியில் அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை தலையீடு இருப்பதாகவும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி, இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மற்றும் புதுச்சேரி ஆளுநர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். 

இதைத் தொடர்ந்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனிஷ் தலைமையிலான தனிப்படையினர், கோயில் நில விவகாரம் குறித்து  விசாரணை மேற்கொண்டு 
இடைத்தரகராகச் செயல்பட்ட சிவராமன் என்பவரைக் கைது செய்து விசாரித்தனர்.

அவர் அளித்த தகவலின் பேரில், காரைக்கால் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜே.சி. பி.ஆனந்த், நில அளவையர் ரேணுகாதேவி உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஜே.சி.பி ஆனந்த் தலைமறைவாகி உள்ளார். கைது செய்யப்பட்ட ரேணுகா தேவியிடம் நடத்திய விசாரணையில்,  துணை ஆட்சியர் ஜான்சன் தலைமையில்தான் இந்த கூட்டு சதி நடந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
 
இதனைத் தொடர்ந்து, மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனை அவரது அலுவலகத்திலேயே வைத்து கைது செய்த தனிப்படை போலீசார்,  மகளிர் காவல் நிலையத்தில் உள்ள ரகசிய அறையில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக எஸ்எஸ்பி தலைமையிலான ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சப் கலெக்டர் ஜான்சனின் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் சைபர் கிராம் பிரிவில் சமர்ப்பித்து ஆய்வு செய்து வருகின்றன.

கோயில் நில மோசடி விவகாரத்தில் மாவட்ட துணை ஆட்சியரே கூட்டுச் சதியில் ஈடுபட்டு கைதாகி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow