மதுபான விடுதி விபத்தில் 3 பேர் பலியான விவகாரம்... கைதான விடுதி உரிமையாளர் 6 மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலை..
சென்னை ஆழ்வார்பேட்டையில் மதுபான விடுதி விபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சரணடைந்த 6 மணி நேரத்தில் விடுதி உரிமையாளர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள Sekhmet என்ற பெயரில் செயல்பட்டு வரும் மதுபான விடுதியின் மேற்கூரை கடந்த மார்ச் 28ஆம் தேதி இடிந்து விழுந்த விபத்தில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், விடுதி மேலாளர் சதீஷ் என்பவரை கைது செய்தனர்.
இதனிடையே மதுபான விடுதியின் உரிமையாளரான அசோக்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் நேற்று (மார்ச் 30) இரவு அபிராமபுரம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் எழுத்துப்பூர்வமாக பல்வேறு விளக்கங்களை பெற்றுக்கொண்ட போலீசார், அசோக்குமார் மற்றும் மேலாளர் சதீஷ் ஆகியோரை காவல் நிலைய ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.
எழுத்துப்பூர்வ விளக்கத்தில், தங்கள் தரப்பில் அனைத்தும் சரியாக உள்ளதாகவும் தாங்கள் தொடர்ச்சியாகவே மதுபான விடுதியை சரியான முறையில் பராமரித்து வந்ததாகவும், மெட்ரோ பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே கட்டிடத்தில் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தங்களுக்கு மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள பிற கட்டிடங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், வேண்டும் என்றால் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களிடம் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக மெட்ரோ பணி நிர்வாகம், மாநகராட்சி சிஎம்டிஏ கட்டட உறுதி தன்மை அளித்த அதிகாரி ஆகியோருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆராய்வதற்காக தடயவியல் நிபுணர்கள் மற்றும் கட்டிட பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?