யப்பா கீழ இறங்குங்கப்பா! தொண்டர்களை கண்டித்த மோடி... ஆந்திராவில் பரபரப்பு!
ஜெகன்மோகன் கட்சியும் காங்கிரசும் ஒரே கூட்டு என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.
ஆந்திராவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்விளக்கு கம்பத்தில் ஏறி நின்ற தொண்டர்களைக் கண்டித்த மோடி, பாதி உரையில் மேடையிலிருந்து இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் நிலையில், அங்கு தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில், பல்நாடு மாவட்டம் சில்கலுரிப்பேட்டில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. அதன் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியும் காங்கிரசும் வெவ்வேறு அல்ல ஒரே கூட்டு. ஆந்திர மக்கள் மாநில அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை புறக்கணிக்க தயாராகிவிட்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியையே ஆந்திர மக்கள் விரும்புகிறார்கள். ஆந்திர மக்களின் பெருமதிப்புக்கு உரிய என்.டி.ஆரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்தே வந்துள்ளது. பாஜக அரசு ஆந்திராவின் கலாசார அடையாளத்தை மிகுந்த மரியாதையுடன் போற்றி வருகிறது" என தெரிவித்தார்.
இதற்கிடையில் பிரதமர் உரையாற்றியபோது தொண்டர்கள் சிலர், மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பங்களில் ஆபத்தை உணராமல் ஏறி நிற்க முயன்றனர். இதைக் கவனித்த பிரதமர் உடனே அவர்களைக் கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது ஆபத்தான முறையில் தொண்டர்கள் மேலே ஏறுவதைக் காவல்துறையினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனச் சாடினார். மேலும் உரையைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு மேடையை விட்டுக் கீழிறங்கினார். இதனால் அப்பகுதியில் சிறு பரபரப்பு காணப்பட்டது.
What's Your Reaction?