"இத மட்டும் ஏன் சொல்லல?" தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதியமனு...
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மூன்றில் ஒருபகுதி தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட 2018ம் ஆண்டுக்கான விவரங்களை வெளியிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து தேர்தல் பத்திரங்களைப் பெற்று, தான் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு தனிநபரோ, நிறுவனமோ நன்கொடை வழங்கும் மத்திய அரசின் தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், சட்டவிரோதம் எனக்கூறி அதனை அதிரடியாக ரத்துசெய்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு விசாரணையின் போது ஒரே நாளில் தகவல்களை அளிக்க வேண்டுமென SBI-க்கு உத்தரவிட்டது. தொடர்ந்து SBI-இடமிருந்து பெற்ற தகவல்களை தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி வெளியிட்டது. அப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் ரூ.12,769 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றது தெரியவந்தது. அதிகபட்சமாக ரூ.6,000 கோடிக்கும் அதிகமாக பாஜக பெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளும் பட்டியலில் இடம்பெற்றது தெரியவந்தது. அப்போதும், எந்தக்கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கப்பட்டது என்பது தொடர்பான சீரியல் எண்கள் வெளியிடப்படாததால், விளக்கம் கேட்டு SBI-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.
இந்நிலையில் 2018 முதல் 2019 வரை ரூ.4,002 கோடி மதிப்பிலான 9,159 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டபோதும், அத்தகவல்களை ஏன் வெளியிடவில்லை எனக்கூறி Citizen's rights trust என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மார்ச் 1, 2018 முதல் ஏப்ரல் 11, 2019 வரையிலான தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண், நிதி பெற்ற தேதி, மதிப்பு, நன்கொடையாளர்கள், அதனைப் பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர் உள்ளிட்டவற்றை SBI வெளியிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவை நடைமுறைப்படுத்தப்பட்ட 2018ம் ஆண்டு முதலான அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள குடிமக்களுக்கு உரிமை உள்ளது எனவும் 76% தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில் 24% தகவல்களையும் SBI வெளியிட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. ரூ.12,769 கோடி நிதி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், அதில் ரூ.4,002 கோடி நன்கொடை அளிக்கப்பட்ட 2018-2019ம் ஆண்டுக்கான தகவல்கள் முறையாக வெளியிடப்படாதது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?