முன்விரோதம் காரணமான வழிமறித்துத் தாக்குதல்... ஒருவர் பலி, இருவருக்கு தீவிர சிகிச்சை!

தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Apr 2, 2024 - 03:00
முன்விரோதம் காரணமான வழிமறித்துத் தாக்குதல்... ஒருவர் பலி, இருவருக்கு தீவிர சிகிச்சை!

தஞ்சை அருகே திமுக பிரமுகரின் உறவினர், முன்விரோதம் காரணமாக வழிமறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோயில் திமுக ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் ஜெயக்குமார். இவரது மைத்துனரான செந்தில்குமார் என்பவர் மீது அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரோடு செந்தில்குமாருக்கு முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக செந்தில்குமார் தஞ்சையில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இவர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு வந்துள்ளார். 

இதையறிந்த அழகேசன், மர்ம நபர்கள் இருவருடன் இணைந்து, செந்தில்குமார் வந்த காரை வழிமறித்துத் தாக்கினார். மேலும், காரைக் கல்லால் அடித்து நொறுக்கியதுடன் செந்தில்குமார், ஜெயக்குமார் உட்பட காரில் இருந்த 3 பேரைக் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இதில் வழியிலேயே செந்தில்குமார் உயிரிழந்தார். 

மேலும், ஜெயக்குமார் உட்பட மற்ற இருவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அழகேசன் தலைமறைவாக உள்ள நிலையில், காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow