அதிமுக பெண் நிர்வாகிக்கு கத்திக் குத்து ... கஞ்சா போதையில் வெறிச்செயல்.. ரவுடி இளைஞருக்கு காப்பு

May 4, 2024 - 20:43
அதிமுக பெண் நிர்வாகிக்கு கத்திக் குத்து ... கஞ்சா போதையில் வெறிச்செயல்.. ரவுடி இளைஞருக்கு காப்பு

சென்னையில் சவ ஊர்வலத்தின் போது அதிமுக பெண் நிர்வாகியை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக  கஞ்சா போதை இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஆதிலட்சுமி முருகேசன். இவர் அதிமுகவில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக உள்ளார். 

இந்த நிலையில் மே 3 ஆம் தேதி அவரது வீட்டிற்கு அருகே இருந்த தட்சிணாமூர்த்தி என்பவர் காலமானார். தொடர்ந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில இளைஞர்கள் போதையில் சடலத்தின் மீதிருந்த மாலைகளை சாலையோர மக்கள்  மது வீசி எறிந்தும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்தும் நொறுக்கியும் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஒரு இளைஞர் தூக்கி எறிந்த மாலை அதிமுக நிர்வாகி ஆதிலட்சுமி மீது விழுந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து “இறந்தவர் மேல் இருந்த மாலையை எங்கள் மேல தூக்கிப் போடலாமா?” என ஆதிலட்சுமி தட்டுக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா போதை இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆதிலட்சுமியின் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆதிலட்சுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட சரவணன் என்பவரை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உட்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சமீப காலமாக இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாக குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைத் அரசு விரைந்து தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow