தோல்வியில் ஹாட்ரிக்கா... சோகத்தில் மும்பை ரசிகர்கள்! 

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைக் கண்டுள்ளதால் அந்த அணியில் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Apr 2, 2024 - 02:28
தோல்வியில் ஹாட்ரிக்கா... சோகத்தில் மும்பை ரசிகர்கள்! 

ஐபிஎல் சீசன் 14-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் நான்கு ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, நமன்திர் மற்றும் டெவால்ட் பிரெவிஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர். இவர்களின் விக்கெட்டுகளை ராஜஸ்தான் பௌலர் ட்ரென்ட் போல்ட் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து விளையாடிய இஷான் கிஷன் 16 ரன்களும் வெளியேறினார். பின்னர் வந்த திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைந்து 56 ரன்களை எடுத்தனர். பாண்டியா 34 ரன்களில் ஆட்டமிழக்க, திலக் வர்மா 32 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்களை எடுத்திருந்தது. 

126 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்தது. 5வது ஓவரில் சஞ்சு சாம்சனை, தனது பந்தால் ஆகாஷ் மெத்வால் வெளியேற்றினார். பின்னர் 7வது ஓவரில் பட்லரையும் மெத்வால் வெளியேற்றினார். தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின், ரியான் பராக் கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் அவுட்டாகி வெளியேற, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ஷூபம் துபே 8 ரன்கள் எடுத்திருந்தார். இறுதி 15.3 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்பை அணி 10 இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் விளையாடி 181 ரன்களை எடுத்த ரியான் பராக், ஆரஞ்சி நிற தொப்பியை பெற்றார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow