கருணாநிதி குறித்து அவதூறு - சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடக் கட்சிகளை அரசியல் மேடைகளில் தாக்கிப் பேசுவதாலேயே பிரபலமடைந்தவர். திராவிடக் கட்சிகளிலும் குறிப்பாக ஆளும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இவர் என்ன பேசினாலும் கைதட்டிக் கொண்டாட தன் தொண்டர் படையையும் உருவாக்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி தகாத வார்த்தைகளில் அவதூறாகப் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பொதுக்கூட்டங்களில் பேசும்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் கடுமையாக சாடியுள்ளார். அதிலும் குறிப்பாக அவரை கிராதகன், கயவன், தீய சக்தி, கருநாகம் மற்றும் சண்டாளன் என்கிற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி கருணாநிதியை சாடியிருக்கிறார் என்றும் அதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் அக்டோபர் 7ம் தேதி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், அந்த மனுவை விசாரித்த கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி, இன்று அந்த மனுவை அனுமதித்து, கருணாநிதியைத் தகாத வார்த்தைகளில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி கரூர் தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?