கன மழை எச்சரிக்கை- மின்சாரத்துறை உத்தரவு 

பொதுமக்கள் மின்னகம் மூலமாக புகார் அளிக்கலாம் என்றும், சமூக வலைத்தளம் மூலம் புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Oct 14, 2024 - 15:59
கன மழை எச்சரிக்கை- மின்சாரத்துறை உத்தரவு 

சென்னை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்து மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். இதில் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களின் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மக்களை எச்சரிக்கும் வகையில் பலகைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 15 மண்டலங்களுக்கு 15 செயற்பொறியாளர்கள் நியமனம் செய்து மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இவர்கள் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்றும், மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் மின்னகம் மூலமாக புகார் அளிக்கலாம் என்றும், சமூக வலைத்தளம் மூலம் புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த மழையின் போது தண்ணீரில் முழ்கிய 4800 பில்லர் பாக்ஸ்கள் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 31 துணை மின் நிலையங்களில் தண்ணீர் புகாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow