Pa Ranjith: சாதிய மோதலை தூண்டுகிறார்... தீபக் ராஜா கொலை விவகாரத்தில் பா ரஞ்சித் மீது போலீஸில் புகார்

பிரபல இயக்குநர் பா ரஞ்சித் மீது சாதிய மோதலை தூண்டிவிடுவதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 25, 2024 - 12:02
Pa Ranjith: சாதிய மோதலை தூண்டுகிறார்... தீபக் ராஜா கொலை விவகாரத்தில் பா ரஞ்சித் மீது போலீஸில் புகார்

சென்னை: அட்ட கத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா ரஞ்சித். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அட்ட கத்தி  முதல் தான் இயக்கிய படங்கள் அனைத்திலும் அடையாள அரசியலை பின்னணியாக வைத்து சமூக பிரச்சினைகளை பேசுவது பா ரஞ்சித்தின் ஸ்டைல். அதேபோல் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படங்களிலும் அடையாள அரசியலை முன்னிலைப் படுத்தி வருகிறார்.   

இன்னொரு பக்கம் நீலம் பப்ளிகேஷன், நீலம் பண்பாட்டு மையம் என கலை, இலக்கியம் ஆகியவற்றிலும் பா ரஞ்சித் கவனம் செலுத்தி வருகிறார். பா ரஞ்சித்தின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதேநேரம் அவரது சில நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்துவதோடு கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகிறது. அரசியல் ரீதியாக பல கருத்துகளை அதிரடியாக பேசி வரும் பா ரஞ்சித், அவரது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக செயல்படுகிறார். இந்நிலையில், அவர் மீது சாதிய ரீதியான மோதல்களை தூண்டி விடுவதாக போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லையில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகின. தீபக் ராஜா மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும், அவர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கொலை வழக்கில் 6 தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் தீபக் ராஜாவின் உடலை வாங்க அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது உடலை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தீபக் ராஜாவின் கொலை விவகாரத்தில் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் அமைப்பு, அவர்களது டிவிட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தது. அதில், “திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, நீலம் பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறது! கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால்  படுகொலை செய்யப்பட்ட முத்துமனோவின் நண்பர், பட்டியலின தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் தீபக்ராஜா பாளையங்கோட்டையில் உணவகத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம். சக மனிதனை படுகொலை செய்யும் மறவர் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக SCST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.  

குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் தீபக் ராஜாவின் கொலைக்கு காரணம் என, பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நேரடியாக குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து பா ரஞ்சித்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக பா ரஞ்சித் மீது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதனிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ”இயக்குநர் பா ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சிக்கிறார். திருநெல்வேலியில் தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு டிவிட்டரில் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே இதுகுறித்து பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow