எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கோவை தொகுதி...   வேட்புமனுத் தாக்கல் செய்த அண்ணாமலை...

பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல்

Mar 27, 2024 - 16:59
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கோவை தொகுதி...   வேட்புமனுத் தாக்கல் செய்த அண்ணாமலை...

கோவை மக்கள் 60 சதவீதம் பேர் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று, பாஜக வேட்பாளர் அண்ணாமலை நம்பிக்கையாக கூறியிருக்கிறார். இந்த தேர்தலில் ஆதிக்க சக்திக்கு எதிராக பாஜக நிச்சயம் வெற்றி பெறும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் பரபரப்பாக காணப்படும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வானதி சீனிவாசன் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மண்டல தேர்தல் அலுவலகத்திற்கு சென்ற அவர், வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கோவை மக்களின் குரலாக மக்களவையில் இருப்பேன் என்றும், கோவையின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் உறுதி அளித்தார்.

கோவை மாநகர், வளர்ச்சி அடையக்கூடாது என்பதில் மாநில அரசு கங்கணம் கட்டி வருவதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, திமுகவும், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.,யும் தடைக்கல்லாக இருப்பதாக சாடினார். இதனால் அதிருப்தியில் உள்ள கோவை மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவை என்பதை உணர்ந்துள்ளதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார். கரூரில் இருந்து கல்லூரி படிக்க வந்தபோது, கோவைதான் என்னை பக்குவப்படுத்தியது என்றும், இங்கள்ள 60 சதவீத மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். சிறுபான்மையினர், பெரும்பான்மை என்கிற வார்த்தைகளை பயன்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அண்ணாமலை கூறினார். 

வேட்பு மனுத்தாக்கலுக்கு முன் கோவை காவல் தெய்வமான கோனியம்மனை கோயிலுக்கு சென்றது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை கூறிய பதில் அங்கு இருப்பவர்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியது. கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை என்று அண்ணாமலை சொன்னதும், அருகில் நின்றிருந்த வானதி சீனிவாசன் சட்டென அதிர்ந்து போய் அண்ணாமலையின் முகத்தைப் பார்த்தார். இதையடுத்து, அண்ணாமலை, கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன் எனச் சொன்னதும் வானதி சீனிவாசன் புன்னகைத்தார்.

தமிழ்நாட்டில் பாஜகவின் வருங்காலம் அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பைச் சார்ந்திருக்கிறது எனக் கூறப்படும் நிலையில், கோவை தொகுதி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow