4 ஆண்டுகள் கழித்து போலீசிடம் பிடிபட்ட தலைமறைவு கொலையாளி

திருமண நிகழ்வு ஒன்றிற்கு வந்திருந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Jan 5, 2024 - 14:48
Jan 5, 2024 - 15:22
4 ஆண்டுகள் கழித்து போலீசிடம் பிடிபட்ட  தலைமறைவு கொலையாளி

நித்திரவிளை அருகே மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி தலைமறைவாகி இருந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்,நித்திரவிளை அருகே கோயிக்கல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் 30, தொழிலாளியான இவர் மாம்பழஞ்சி பகுதியை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேஷ் வேலைக்கு ஏதும் செல்லாமல் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2015 ம் ஆண்டு சவுமியா வீட்டில் தனிமையில் இருக்கும்போது அங்கு வந்த ராஜேஷ் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.அதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அருகில் கிடந்த அருவாமனையால் சவுமியாவின் கழுத்தை அறுத்துகொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருந்தார்.இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ராஜேஷ் 2021ம் ஆண்டு முதல் வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்து வந்துள்ளார்.இதனால் நீதிமன்றம் ராஜேஷை கைது செய்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ராஜேஷை தேடி வந்த நிலையில்,காஞ்சாம்புறம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றிற்கு ராஜேஷ் வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜேஷை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் நான்கு ஆண்டுகளாக தலைமறைவாகி குற்றவாளியை கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow