3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி-நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்

காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 16, 2024 - 08:14
Feb 16, 2024 - 08:36
3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி-நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்


டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு நேற்று (பிப்.15)  நடத்திய 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில்  முடிவடைந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் இன்று நடைபெறும் பாரத் பந்த்-க்கு 15 விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருக்கிறது.

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 37 விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியை முற்றுகையிடும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். காவல்துறையினரின் அடக்கு முறைகளை சற்றும் பொருட்படுத்தாத விவசாயிகளின் போராட்டம் இன்று (பிப். 16) 4-வது நாளை எட்டியிருக்கிறது.

விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8 மற்றும் 12-ம் தேதிகளில் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், மத்தியஅமைச்சர்கள் அடங்கிய குழுவினரும் நேற்று (பிப்.15) மாலை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையிலும்  தீர்வு எட்டப்படாததால் போராட்டத்தை தொடர்ந்து தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அடுத்தக்கட்ட பேச்சுவார்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கத்தினர் இன்று நடைபெறும் பாரத் பந்த்தில் பங்கேற்க வேண்டும் என சம்யுக்தா கிசான் மோர்சா உள்பட பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் மத்திய தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பஞ்சாப் மற்றும் அரியானாவில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை  3 மணி நேரத்திற்கு சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow