குடிநீரில் மனித கழிவு... கிடைக்காத நீதி.. தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல் கிராம மக்கள்
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்த மனித குலத்தில் இழிவான செயலாக பார்க்கப்பட்ட இந்த சம்பவம் நடந்து 15 மாதங்கள் ஆகும் நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கைவயல் கிராம மக்கள் அந்த கிராமத்தில் 2 இடங்களில் பதாகை வைத்துள்ளனர். அந்த பேனரில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தில் நீதி கிடைக்காததால் வருகின்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அனுமதி இன்றி அங்கு பதாக வைத்துள்ளதால் அந்த கிராம மக்களோடு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?