அரசுப்பள்ளி நோக்கி படையெடுக்கும் பெற்றோர்... 1லட்சத்தை தாண்டிய மாணவர் சேர்க்கை...
கடந்த 1ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுவாக பள்ளிகள் ஜூன் மாதங்களில் தொடங்கும் என்றாலும் மாணவர் சேர்க்கை அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிடும். அந்த வகையில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ம் தேதியே தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக மாற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் கடந்த 1-ம் தேதி முதல் தொடங்கியது.
கடந்த கல்வியாண்டுகளில் பெரும்பாலான மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி சென்றனர். இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் இன்று(மார்ச் 12) வரை அரசுப்பள்ளிகளில் 1 லட்சத்து 1,433 மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 12 நாட்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,946 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?