நள்ளிரவில் உலாவரும் உருவம்... கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.... வீட்டைவிட்டு வெளியேவர மக்கள் அச்சம்

மயிலாடுதுறையில் நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நடமாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள நிலையில், பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Apr 3, 2024 - 12:24
நள்ளிரவில் உலாவரும் உருவம்... கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.... வீட்டைவிட்டு வெளியேவர மக்கள் அச்சம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த செம்மங்குளம் பகுதியில் நடமாடிய சிறுத்தை ஒன்றை, அங்கிருந்த நாய்கள் துரத்திச் சென்றுள்ளன. இதனை கண்ட வாகன ஓட்டிகள், வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், அங்கு பொதுமக்கள் பலரும் கூடினர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், கால் தடத்தை ஆராய்ந்து, சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். 

தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நாய்கள் சிறுத்தையை விரட்டிச் சென்றது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரலான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

இதனிடையே, இன்று அதிகாலை செம்மங்குளம் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையானது, அங்கிருந்த பன்றியை கடித்துக் கொன்ற சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம், அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சிறுத்தை தென்பட்டால், 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow