2-வது நாளாக அமளி : நாடாளுமன்றம் முடங்கியது: அவைக்கு வெளியே எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளாக இன்றும் (டிசம்பர் 2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2-வது நாளாக அமளி : நாடாளுமன்றம் முடங்கியது: அவைக்கு வெளியே எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம்
Parliament adjourned for 2nd day

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நேற்று (டிசம்பர் 1) தொடங்கியது. தமிழகம், கேரளம் உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியைத் தொடர்ந்து நேற்று நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் முடங்கின. இருப்பினும், அமளிக்கிடையே மணிப்பூர் ஜிஎஸ்டி மசோதா மட்டும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது.

இன்றும் தொடரும் அமளி மற்றும் ஒத்திவைப்பு

தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியவுடன், எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மீண்டும் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவைத் தலைவர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததால், அவையின் மையப் பகுதியில் கூடிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விவாதத்துக்கு அனுமதிக்கக் கோரியும் எஸ்ஐஆர்-க்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியும் அமளியில் ஈடுபட்டனர். 

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், மக்களவை முதலில் பகல் 12 மணி வரையிலும், பின்னர் மீண்டும் பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் எஸ்ஐஆர் விவகாரம் குறித்து அமளியில் ஈடுபட்டதால், அந்த அவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்ஐஆர் பணிகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

எதிர்கட்சிகள் போராட்டம்

இந்த நிலையில், இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்குவதற்குமுன்னதாக, எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை நிறுத்துக, வாக்குத் திருட்டை நிறுத்துக போன்ற பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow