பேருந்தில் சில்மிஷம்: பறிபோன உயிர்,அவதூறு பரப்பிய பெண் கைது
கேரளா மாநில கோழிக்கோடு அரசு பேருந்தில் சில்மிஷம் செய்தத்தாக அவதூறு வீடியோ வெளியிட்ட பெண்ணை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
பேருந்து பயணத்தின் போது தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி ஷிம்ஜிதா ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் பொதுமக்களின் எதிர்வினையால் மனமுடைந்த தீபக் தற்கொலை செய்துகொண்டார்.
அந்த வீடியோவைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட ஷிம்ஜிதாவின் செல்போனை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பல சிறு பதிவுகளைக் கொண்டு எடிட் செய்யப்பட்டதாக போலீஸார் சந்தேகித்தனர். உண்மை நிலையை அறியவும், இந்த வீடியோவைப் பதிவிட்டதன் பின்னணியில் உள்ள உள்நோக்கத்தை ஆராயவும் அசல் வீடியோக்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், அவர் இதற்கு முன்னரும் இதுபோன்று வீடியோக்களை வெளியிட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது. வீடியோ வெளியிட்ட ஷிம்ஜிதா தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கோழிக்கோடு போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். முன்னதாக, தனக்கு முன்ஜாமீன் கோரி கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் ஷிம்ஜிதா மனு தாக்கல் செய்திருந்தார். அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க போலீஸார் ஏற்கனவே அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவை வடகரை பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து போலீஸார் பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவரை மருத்துவப் பரிசோதனைக்காக கொயிலாண்டி தாலுகா மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.இதற்கிடையில், இந்த வழக்கை சிபிஐ (CBI) அல்லது கிரைம் பிராஞ்ச் விசாரணைக்கு மாற்றக் கோரி அகில கேரளா ஆண்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. போலீஸார் ஷிம்ஜிதாவைக் காப்பாற்ற முயற்சிப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டியுள்ளனர்.
What's Your Reaction?

