சென்னையில் தொடரும் கனமழை: ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சென்னையில் மழை தொடரும்
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும், சென்னைக்கு அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் பல மணி நேரமாக ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது. இது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, இன்று நள்ளிரவு எண்ணூர் - மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் சென்னை மற்றும் திருவள்ளூரில் ஒருசில இடங்களில் கனமழை தொடரும். நாளை (புதன்கிழமை) முதல் 5ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை பகுதிகளில் கனமழை பதிவு
தமிழகத்தல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் எண்ணூரில் 26 செ.மீ. மழை பெய்து உள்ளது.
பாரிமுனை-25 செ.மீ., ஐஸ்அவுஸ்-22, மணலிபுதூர், பொன்னேரி தலா 21 செ.மீ., பேசின்பாலம், சென்னை கலெக்டர் அலுவலகம், பெரம்பூர் தலா 20 செ.மீ., மணலி, செங்குன்றம் தலா 19 செ.மீ., விம்கோ நகர், வடபழனி, டி.ஜி.பி. ஆபிஸ், மேடவாக்கம் தலா 18 செ.மீ., அயனாவரம், தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கத்திவாக்கம் தலா 17 செ.மீ.,
புழல், சாலிகிராமம், சைதாப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம் தலா 16 செ.மீ., பெரம்பூர், அமைந்தகரை தலா 15 செ.மீ., எம்.ஜி.ஆர். நகர், சோழவரம், நாராயணபுரம், அடையார் தலா 14 செ.மீ., காசிமேடு, வேளச்சேரி, அண்ணா பல்கலைக்கழகம் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1000 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மொத்தமுள்ள 13.22 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 6 ஏரிகளில் 10.64 டிஎம்சி நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிகளில் கடந்தாண்டு இதே நாளில் 7.96 டிஎம்சி நீர் இருந்துள்ளது. பூண்டி ஏரியில் 3.23 டிஎம்சி, சோழவரம் ஏரியில் 1.08 டிஎம்சி, புழல் ஏரியில் 3.30 டிஎம்சி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 0.50 டிஎம்சி, செம்பரம்பாக்கம் ஏரியில் 3.65 டிஎம்சி மற்றும் வீராணம் 1.46 டிஎம்சி நீர் இருக்கின்றது.
மெரீனா தேங்கிய மழைநீர்
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வரும் நிலையில், மழையால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை இன்று இரவு வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக மெரினா கடற்கரை மணல் பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் கடற்கரையின் சில பகுதிகள் கடல் போல காட்சியளிக்கின்றன. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மெரினா கடற்கரைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?

