வெற்றி வாய்ப்பு யாருக்கு..? வாக்கு எண்ணிக்கை முடியட்டும்.. அண்ணாமலை பேச்சுக்கு பெரியகருப்பன் பதில்

Apr 26, 2024 - 15:02
வெற்றி வாய்ப்பு யாருக்கு..? வாக்கு எண்ணிக்கை முடியட்டும்.. அண்ணாமலை பேச்சுக்கு பெரியகருப்பன் பதில்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்ததும், கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை யாரும் எதையும் சொல்லிக்கொள்ளலாம் என பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், "கடந்த காலங்களில் நடத்த முடியாத தேர்தல்களையும் நடத்தி காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தேர்தலை நடத்தாமல் போகிற அரசாங்கம் திமுக அரசு அல்ல. 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்ததும், ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும். நாம் நினைத்த உடனே உடனடியாக தேர்தலை நடத்த முடியாது. அதற்கான பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது, உறுப்பினர்களை சேர்ப்பது போன்றவை நிறைவடைந்த பிறகு தேர்தல் நடத்தப்படும். கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வரலாறு காணாத அளவில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன், சிறு தொழில் கடன் உள்ளிட்டவை 2 மடங்காக உயர்த்தி வழங்கப்படுகிறது. வழங்கப்பட்ட கடன் தொகையும் முறையாக வந்துகொண்டிருக்கிறது.

கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது சகஜம் தான். குடிநீர் தட்டுப்பாட்டை அரசுப் போக்கி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது. எந்தப் பகுதியிலாவது குடிநீர் கிடைக்கவில்லை என நிர்வாகத்திற்கு தகவல் அளித்தால் நிவர்த்தி செய்யப்படும்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறியிருக்கிறார். பாமக தலைவர் ராமதாஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறியிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை எல்லா எண்களையும் சொல்வதற்கு வாய்ப்புள்ளதால் அப்படி சொல்லிக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow