தமிழக அரசியலில் திருமாவளவன் கரும்புள்ளியாக இருக்கிறார் - எச்.ராஜா

2026ல் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் போது திமுகவின் ஊழல் வெளியே கொண்டுவரப்படும் என்று பாஜக வழிகாட்டுக்குழுத் தலைவர்  எச்.ராஜா கூறியிருக்கிறார். 

Oct 4, 2024 - 16:49
தமிழக அரசியலில் திருமாவளவன் கரும்புள்ளியாக இருக்கிறார் - எச்.ராஜா
h.raja

நெல்லை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மாவட்ட பாஜக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக வழிகாட்டுக் குழு தலைவர் எச். ராஜா கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக அரசின் நடவடிக்கைகள் சார்ந்து தனது விமர்சங்னங்களை முன் வைத்தார். 

“சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார், தமிழக பாஜக தலைவரும் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார் இந்நிலையில் 63 ஆயிரத்து 246 கோடி நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தமிழக பாஜக வரவேற்கிறது. தமிழகத்தில் 10 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதும் வரவேற்கதக்கது.” என்றவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மகளிர் மாநாடு பற்றிப் பேசினார். 

“அக்டோபர் இரண்டாம் தேதி உளுந்தூர்பேட்டையில் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நோ பால் போட்டு ரன் எடுப்பது போல் அந்த மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த மாநாட்டில் திமுக விசிகவின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு மது கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. 

மதுவிலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நிவர்த்தியது. இப்படியிருக்கையில் மத்திய அரசு மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என சொல்வது போலி நாடகம். மது மூலமாக மாநில அரசுக்குக் கிடக்கும் 48 ஆயிரம் கோடியை மத்திய அரசு தரவேண்டும் என கோருவதற்கும் மத்திய அரசின் மீது பழி போடுவதற்குமே இந்த போலி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். 

தமிழகத்தில் சாராய மரணங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 28 பேர் உயிரிழந்தார்கள் இந்த ஆண்டு 68 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றிலிருந்து  மக்களை திசை திருப்ப நடத்தப்பட்ட நாடகமாகத்தான் விசிக மாநாடு பார்க்கப்படுகிறது. விசிக மாநாட்டில் பெண் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அநாகரிகமான காட்சிகள் விசிக மாநாட்டில் நடந்தது. விசிக அநாகரிகமான கட்சி. சமுதாயத்தை வழி நடத்தும் தகுதி திருமாவிடம் இல்லை. தமிழக பாஜக முன்னாள் தலைவரும் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்து அநாகரிகத்தின் உச்சகட்டத்தில் திருமாவளவன் பேசியுள்ளார்.

தமிழக அரசியலில் கரும்புள்ளியாக திருமாவளவன் இருக்கிறார். திமுகவை அதன் குற்றத்திலிருந்து காப்பாற்ற மாநாடு என்ற நாடகத்தை விசிக அரங்கேற்றி உள்ளது. குடியை மறந்த தமிழனை குடிக்க வைத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அடுத்த தலைமுறை தமிழனை சீரழித்தது திராவிட மாடல் அரசியல். பள்ளிக்கூட வாசலில் கஞ்சா பொட்டலங்கள் விற்கப்படுகிறது. திமுக பிரமுகர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் போதைப் பொருள் அணி என அணியை உருவாக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தை அழித்துக் காட்டுவோம் என்று திட்டமிட்டு செயல்படுத்தும் தீய சக்தியாக திமுக செயல்படுகிறது.” என்றவர் தற்போதைய திமுக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் செயல் இழந்து கிடக்கிறது என்று குற்றம் சாட்டினார். 

“இரு மொழிக் கொள்கை என பேசிவிட்டு முதல்வர் மகள் நடத்தும் பள்ளியில் இரு மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படவில்லை. ஏழை மக்கள் குழந்தைகளுக்கு இருமொழிக் கல்வி அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களின் குழந்தைகளுக்கு மும்மொழிக் கல்வி பயில்வது என்ன நியாயம். வீட்டுக்கு மும்மொழி தமிழ்நாட்டுக்கு இரு மொழி என்பது என்ன வேடம். இந்தப் போலி வேடத்தை பாஜக வீடு வீடாக எடுத்துச் செல்லும் திமுக வேஷம் மக்கள் மத்தியில் எடுபடாது.” என்றவர் பள்ளிக்கல்வித்துறையில் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்துக் கூறினார். 

“மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை விட ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியம் அதிகமாக உள்ளது. அதற்கு அரசு என்ன செய்யப் போகிறது. திமுகவிற்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட நிதி நிலையை விட தற்போதைய பாஜக ஆட்சியில் உட்கட்டமைப்புக்காக நிதி பல கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.” என்றார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow