மோகன்லாலின் எம்பூரான் திரைப்படம்.. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கல்லூரி முதல்வர்
பெங்களூருவிலுள்ள குட் ஷெப்பர்ட் கல்லூரி (Good Shepherd College) எம்பூரான் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ளது.
                                    பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஆன லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான L2E:எம்பூரான் வருகிற மார்ச் 27, 2025 அன்று உலகளவில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், பெங்களூருவிலுள்ள குட் ஷெப்பர்ட் கல்லூரி (Good Shepherd College) எம்பூரான் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
கல்லூரி முதல்வர் மோகன்லாலின் தீவிர ரசிகராம். தனது பிரியத்திற்குரிய மலையாள சூப்பர் ஸ்டாருக்காக கல்லூரிக்கு விடுமுறை அளித்தது மட்டுமின்றி, மாணவர்களுக்காக பிரத்யேக காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளார் கல்லூரி முதல்வர்.
இலவச டிக்கெட்டுடன் பிரத்யேக காட்சி:
ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஒய்.ஜி.ஆர் மாலில் உள்ள மூவி டைம் சினிமாஸில் காலை 7 மணிக்கு பிரத்யேக காட்சியை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. படத்தினை காண மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகளையும் வழங்குகிறது. முன்னதாக, 2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியானபோது, சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள பல நிறுவனங்கள், படம் வெளியான முதல் நாளன்று தங்கள் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்த சம்பவம் அப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
L2E:எம்பூரான் திரைப்படம் மூலம் மலையாள சினிமா ஒரு புதிய அத்தியாத்தை தொடங்க உள்ளது. அது என்னவென்றால், மலையாள படம் ஒன்று முதன் முறையாக IMAX திரையில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பினை சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
L2E படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி நடித்துள்ளார். மேலும், டோவினோ தாமஸ், சூரஜ் வெஞ்சரமூடு, மஞ்சு வாரியர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் ஜெரோம் ஃப்ளின், இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். லைகா சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: ட்ராமா திரைப்படம் விமர்சனம்: புதுசா இருக்கு..ஆனாலும்?
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            