தலைமை செயலகத்தில் பொங்கல் விழா: வேட்டி, சட்டை உடன் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்முறையாக அரசு ஊழியர்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
துணை முதல்வர், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வேட்டி, சட்டை அணிந்து முதல்வர் ஸ்டாலின் வந்திருந்தார். பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம், தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.
எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, திமுக அரசு பணியாற்றி கொண்டு இருக்கிறது. நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்து தான் உழைத்து கொண்டு இருக்கிறீர்கள். தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தலைமை செயலகத்தில் இருந்து நீங்கள் எல்லாம் நேரம், காலம் பார்க்காமல் உழைத்து கொண்டு இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுடன் இந்த பொங்கல் விழாவை கொண்டாடுவதில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மகிழ்ச்சி உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும், பொங்கட்டும் என்று இந்த இனிய தினத்தில் எடுத்து சொல்லி உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
What's Your Reaction?

