விஜய் 69 படத்தின் பூஜை தொடங்கியது
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது.
அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் தனது 69 வது படத்துடன் நடிப்பை நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இத்திரைப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன், துணிவு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். படத்தின் நாயகியாக ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒன்றாக நடித்த ‘பூஜா ஹெக்டே’ நடிக்கவிருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், பாபி தியோல், பிரேமலு புகழ் மமிதா பைஜூ ஆகிய பலரும் இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி திண்டிவனத்தில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. இதே நாளில் விஜய் 69 படத்துக்கான பூஜையும் நடைபெற்றுள்ளது.
இப்பூஜையில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைக்கதையின் சிக்கலால் ப்ளாக் பஸ்டர் வெற்றி அமையவில்லை. இந்நிலையில் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநரான ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தின் மேல் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியிருக்கிறது.
What's Your Reaction?