6 பேரின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை!: முரா (மலையாளம்) சினிமா விமர்சனம்

தாங்கள் எடுத்துக்கொண்டை கதையை, திரையில் மிகச்சிறப்பாகக் கொண்டுவந்த ஒட்டுமொத்த டீமுக்கும் வாழ்த்துகள்!

Nov 8, 2024 - 12:33
Nov 8, 2024 - 16:16
6 பேரின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை!: முரா (மலையாளம்) சினிமா விமர்சனம்

20 வயதுடைய 4 இளைஞர்கள், பிரபல ரவுடி ஒருவனிடம் புதிதாகச் சேர்கின்றனர். அந்த ரவுடியிடம் ஏற்கனவே வேலை பார்க்கும் அனுபவமுள்ள சில நபர்களே, ஒருசில விஷயங்களில் பயந்து நடுங்கும்போது, அந்த 4 பேரின் இளமையான ரத்தமும் சில விஷயங்களைத் துணிச்சலாகச் செய்ய வைக்கிறது. இதைப் பார்த்து பெருமையாக நினைக்கும் அந்த பிரபல ரவுடி, அந்த இளைஞர்களிடம் மிகப்பெரிய பொறுப்பு ஒன்றைத் கொடுக்கிறான்.

இதனால், திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் அந்த இளைஞர்கள், மேலும் 2 இளைஞர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகின்றனர். அவர்களால் அந்த பொறுப்பை செய்துமுடிக்கத் முடிக்க முடிந்ததா? அதன்பின் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதுதான் ரத்தமும் சதையுமான ‘முரா’ படத்தின் மீதி திரைக்கதை.

எமோஷன், ஆக்‌ஷன் என இரண்டையும் கலந்து, படம் முடியும்வரை இருக்கையுடன் ஆடியன்ஸை கட்டிப்போடுகிறார், இயக்குநர் முஹமது முஸ்தஃபா. ரவுடியிஸம் பற்றி நிறைய திரைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தாலும், 4 இளைஞர்களை வைத்து, அவர்களின் பாசம், நேர்மை, நம்பிக்கை, பழிவாங்கல் என சிறப்பான கமர்ஷியல் படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர். தாங்கள் எடுத்துக்கொண்டை கதையை, திரையில் மிகச்சிறப்பாகக் கொண்டுவந்த ஒட்டுமொத்த டீமுக்கும் வாழ்த்துகள்!

அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம், பல காட்சிகளில் கதையோடு நம்மை ஒன்றிப்போகச் செய்கிறது. அதேசமயம், ஒருசில காட்சிகள் முன்பே யூகிக்கும்படி இருக்கிறது. ஃபாசில் நஸீரின் கேமராவும், சாமன் சக்கோவின் எடிட்டிங்கும், திரைக்கதையின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படத்தின் முதல் பாதியில் துள்ளாட்டம் போடவைக்கும் கிறிஸ்டி ஜோபியின் இசை, இரண்டாம் பாதியில் கரையவும் வைக்கிறது. சுரேஷ் பாபுவின் எழுத்தில், வசனங்கள் தெறிக்கின்றன.

சுராஜ் வெஞ்சரமூடு, ரவுடியாக தன் கதாபாத்திரத்துக்கு 200 சதவீதம் நியாயம் செய்து முடித்துள்ளார். ரவுடிக்குள் இருக்கும் குறைந்தபட்ச நியாயம், சூழ்நிலையால் சில விஷயங்களைச் செய்ய வேண்டி வருவது என அனைத்தையும் அருமையாக செய்து முடித்துள்ளார். முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 4 இளைஞர்களுமே அட்டகாசப்படுத்தி உள்ளனர்.

எமோஷன், ஆக்‌ஷன் இரண்டுமே அவர்களுக்கு இயல்பாக வருகிறது. குறிப்பாக, ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் பரத்துகின்றனர். மதுரை இளைஞர்களாக நடித்திருக்கும் இருவரும் மிகச்சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் நடிப்பில் படத்தின் கடைசி ஸீன், கைத்தட்டலை அள்ளிச் செல்கிறது.

4 இளைஞர்களில், அனந்துவாக நடித்திருக்கும் ஹ்ரிது ஹாரூனின் நடிப்பு வியக்க வைக்கிறது. எல்லாவிதமான எமோஷன்களையும், அந்தந்த மீட்டருக்கு குறையாமல் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். இரண்டாம் பாதியில் அவர் கரைந்து உருகும்போது, நமக்கும் அழுகை வருகிறது. தென்னிந்திய சினிமாவின் அடையாள நடிகராக உச்சம்தொட வாழ்த்துகள் ப்ரோ...

ஒரு படத்தின் இன்டர்வெல், ஆடியன்ஸுக்கு ஹைப்பை தரவேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பும், சரியான நேரமும் இருந்தும் இன்டர்வெல் விடாமல், அதைத்தாண்டியும் படம் போய்க்கொண்டிருப்பது, படத்திற்கு சற்றே சறுக்கலைத் தருகிறது. அதேபோல், கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும், மலையாளப் படத்தில் இவ்வளவு வன்முறையைப் பார்ப்பதும் சற்றே பயமாக இருக்கிறது. இதுபோல் சின்னச் சின்ன குறைகளைத் தவிர, விறுவிறுப்புடன் கூடிய எமோஷனை ஆடியன்ஸுக்கு கடத்தி வெற்றி பெற்றுள்ளது, ‘முரா’.

- சி.காவேரி மாணிக்கம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow