100 கோடி கிளப்பில் இணைந்த வேட்டையன்….!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி உள்ள வேட்டையன் திரைப்படம் இரண்டே நாளில் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Oct 12, 2024 - 12:57
100 கோடி கிளப்பில் இணைந்த வேட்டையன்….!

ஜெய்பீம் வெற்றியைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கிய அடுத்தப் படம் வேட்டையன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், கடந்த 10 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது. ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்த ரஜினிக்கு, கேமியோ செய்த ‘லால் சலாம்’ எதிர்பார்த்தளவில் கைக் கொடுக்கவில்லை. இதனால் வேட்டையன் படம் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது.
 
இந்நிலையில், முதல் நாள் அன்று வேட்டையன் படத்துக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்த்தளவில் வரவேற்பு இல்லை என சொல்லப்பட்டாலும், இரண்டாம் நாள் குடும்பம் குடும்பமாக சென்று மக்கள் தியேட்டருக்கு படையெடுத்துள்ளனர். 

வழக்கமாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றாலே, மரண மாஸ் எண்ட்ரி, திருவிழாகோலம் போல தியேட்டர்கள், சீன் பை சீன் கிளாப்ஸ் என அனைவரும் விசிலடித்து கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால், வேட்டையன் படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளை தவிர மற்ற இடங்களில் ரஜினி ரசிகர்களே அமைதியாக இருந்தனர். அந்தளவுக்கு வேட்டையன் படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங், பஞ்ச் டயலாக் ஆகியவைகளில் கூஸ்பம்ஸ் மொமண்ட்கள் இல்லை என சொல்லப்படுகிறது.   
  
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ரஜினிகாந்த், சமூக விரோதிகளை சகட்டு மேனிக்கு போட்டுத் தள்ளுகிறார். எந்த குற்றங்களாக இருந்தாலும், ரஜினியின் மொழி ஆக்ஷனாக மட்டுமே உள்ளது. ஆனால், அது தவறு என அமிதாப்பச்சன் புரிய வைக்க, இறுதியாக என்கவுன்டர் மனநிலையில் இருந்து திருந்துகிறார் ரஜினி. இந்த ஒன்லைன் நன்றாக இருந்தாலும், ரஜினிக்கான மாஸ் மூவியாக இது உருவாகவில்லை என, வேட்டையன் குறித்து ரசிகர்கள் கூறியிருந்தனர். அதேநேரம், ரஜினியை நடிப்பில் இப்படியொரு சமூக அக்கறையுடன் கூடிய படம் இயக்கிய ஞானவேலுக்கு, பலர் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர். ரஜினி போலீஸாக நடித்த தர்பார், ஜெயிலர் போன்ற படங்களும் காவல்துறையை புகழ்ந்து தள்ளும் படங்களாக இருந்தன. ஆனால், வேட்டையன் படத்தில், ரஜினியை வைத்தே ரஜினி சொன்ன கருத்தை தவறென்று சொல்ல வைத்துள்ளார் இயக்குநர். காவல்துறை எப்போதும் அதிகாரவர்க்கத்தின் ஏவல்துறையாகத்தான் இருக்கும் என்பதை ஆணித்தரமாக ரஜினியை வைத்தே மெசேஜ் சொல்லியுள்ளார் ஞானவேல். என்கவுண்டர் குறித்து மட்டுமல்ல, நீட் கோச்சிங் குறித்தும், சேரி மக்கள் குத்தப்படும் லேபிள் உள்ளிட்டவற்றை தகர்த்து எறிந்துள்ளது இப்படம். 

இந்நிலையில், கலவையான விமர்சனங்களால் வேட்டையன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல், எதிர்பார்த்தளவில் இல்லை எனத் தெரிகிறது. அதன்படி, முதல் நாளில் வேட்டையன் திரைப்படம் 65 முதல் 70 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 55 முதல் 65 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளது வேட்டையன். மொத்தமாக இரண்டு நாட்களில் 130 முதல் 140 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow