வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. திருவள்ளூரில் பவர் கட்.. 1.5 லட்சம் பேர் கடும் அவதி
திருவள்ளூர் அருகே டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறியதால் சுமார் ஒன்றரை லட்சம் பேர் மின்சாரம் இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கோபாலபுரத்தில் 110 /11 கிலோ வாட் துணை மின்பகிர்மான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் உள்ள 3 ராட்சத ட்ரான்ஸ்பார்மரில் மின்கசிவு காரணமாக திடீர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மரில் உள்ள ஆயில் வெடித்து சிதறியதில் தீ மளமள என பற்றி எரிய தொடங்கியது.
தகவலின் பேரில் ஆவடி, அம்பத்தூர்,பூந்தமல்லி, செங்குன்றம் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. இருபதுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறிய நிலையில், பட்டாபிராம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15 வார்டுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், சுமார் ஒன்றரை லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். கோடை வெயில் நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் முதியவர்கள், குழந்தைகள், கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்ய 2 முதல் 3 நாட்கள் தேவைப்படும் என்பதால் அதுவரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேட்டியளித்த அவர், மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்காக மாற்று ஏற்பாட்டை செய்ய மின்சாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
What's Your Reaction?