சுட்டெரிக்கும் கோடை வெயில்... வற்றிப்போன பாலாறு அணைக்கட்டு... கருகும் பயிர்... வேதனையில் விவசாயிகள்
கோடை வெயில் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாறு அணைக்கட்டு வற்றிப்போனதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள பாலாறு அணைக்கட்டானது, 1858 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. பாலாறு ஆண்டு முழுவதும் நீர் ஓடும் வற்றாத ஆறாக இருந்து வந்தது. பருவ காலங்களில் பெய்யும் மழையே இதன் நீர் ஆதாரம் ஆகும். பாலாறு அணைக்கட்டால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 14,309 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளது.
அணையின் தெற்கில் கிடைக்கும் உபரி நீரை இரண்டாக பிரித்து, காஞ்சிபுரம் மாவட்டம் தூசி வழியாக பாலாற்றின் கிளை நதியான செய்யாறு ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறிய கால்வாய் வழியாக சக்கரமல்லூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பாலாறு அணைக்கட்டுக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. மேலும், வற்றாமலேயே இருந்து வந்த பாலாறு அணைக்கட்டானது, தற்போது, வறண்டு போய் காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், பயிர்களுக்கான உரிய இழப்பீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?