கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை… குளிர்ந்து போனது குடியாத்தம், ஆம்பூர்...

May 2, 2024 - 20:06
கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை… குளிர்ந்து போனது குடியாத்தம், ஆம்பூர்...

குடியாத்தம் மற்றும் ஆம்பூர் பகுதிகளில் காற்றுடன்  கூடிய ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

கோடை காலம் சூடுபிடித்துள்ள நிலையில் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எங்காவது மேகம் கருத்து மழை பெய்யுமா? என வானையே அண்ணாந்து பார்க்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  இன்று(மே-02) மழை செய்துள்ளது. 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையால்  அனல் காற்று வீசி பொதுமக்கள் அல்லோலப்பட்ட நிலையில், திடீர் மழையால் மண் குளிர்ந்து பொதுமக்களும் விவசாயிகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். 

மேலும், ஆலத்தூர் கூடநகரம் கொத்தகுப்பம், பட்டு, செம்பேடு, கருணீக சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி கொட்டித் தீர்த்தது. குடியாத்தம் பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததால் கடும் அனல் காற்றால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்த திடீர் கனமழை காரணமாக குடியாத்தம் பகுதியே குளுகுளு பகுதியாக மாறியுள்ளது.

இதேபோல திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. கடுமையான வெயில் வாட்டி வைத்து வந்த நிலையில் திடீர் மழையால் வெப்பம் நீக்கி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow