நாகை - காங்கேசன்துறை இடையே மீண்டும் கப்பல் சேவை..13-ம் தேதி தொடக்கம்.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்.
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வரும் 13-ம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்குப் பின் கடந்தாண்டு அக்டோபர் 14-ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு 'செரியாபாணி' என்ற பெயரில் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். ஆனால் சில நாட்களிலேயே மழையைக் காரணம் காட்டி 'செரியாபாணி' கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கப்பலில் பயணிக்க மக்களுக்கு ஆர்வம் இல்லாததே கப்பல் சேவையை நிறுத்தக் காரணம் எனவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் நாகை – காங்கேசன்துறை இடையே வரும் 13-ம் தேதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்தமானில் தயாரிக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் இயக்கப்பட உள்ளது. அந்தமானில் இருந்து வரும் 10-ம் தேதி நாகைப்பட்டினம் துறைமுகத்திற்கு சிவகங்கை கப்பல் கொண்டுவரப்பட்ட பிறகு, சோதனை ஓட்டம் முடிவடைந்து வரும் 13-ம் தேதி பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளது.
சிவகங்கை கப்பலில் உள்ள வசதிகள்
சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகளும் பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்து செல்லவும், கைப்பையில் 5 கிலோ வரை எடுத்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சிவகங்கை கப்பலில் பயணம் செய்ய சாதாரண வகுப்பில் ஒரு நபருக்கு ரூ.5,000 மற்றும் பிரீமியம் வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.7,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்திற்கு sailindsri.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இதுவரை பல்வேறு தேதிகளில் பயணிக்க 126 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 மாதங்களுக்குப் பிறகு நாகை – காங்கேசன்துறை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சேவை மூலம் இந்தியா – இலங்கை இடையே சுற்றுலா, வணிகம் மற்றும் வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?