ஓ.. இவங்கதானா? பாஜகவில் இணையும் அந்த 5 பேர் யார்? லீக்கான கமலாலய சீக்ரெட்!
சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விஜயதரணி பாஜகவுக்கு தாவிய நிலையில், மேலும் சிலர் இன்றும் நாளையும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்தான விவரங்கள் அரசியல் உலகில் கிசுகிசுக்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் கூடிய விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் இந்திய கூட்டணியில் உள்ள முக்கிய எம்.பி., எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டம் விளவங்கோடு எம்.எல்.ஏ.வாகவும், சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்த விஜயதரணி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்துக்கு அத்தொகுதியை வழங்கியது கட்சி மேலிடம்.
இதனால், காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி. மேலும், கட்சிக்குள் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதனால், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிப்.24-ம் தேதி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், பாஜக வளர்ச்சி பாதையில் உள்ளதால் எல்லாம் தானாக வந்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அந்த முக்கிய புள்ளி அதிமுகவின் மா.ஃபை. பாண்டிராஜன் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதனை மறுத்த மா.ஃபாய். பாண்டிராஜன், ”என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன் !” என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பாண்டிராஜன் இல்லையென்றால் பிறகு யார் தான் அந்த முக்கிய புள்ளிகள் என்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றது. இந்த நிலையில், தற்போது ஒரு கமலாலய வட்டாரத்தில் இருந்து லீக்காகியுள்ளது. அதாவது, அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்து 5 பேர் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யார், யார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாததால், கமலாலயத்தின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
What's Your Reaction?