மகளிருக்கு மாதம் ரூ.2500: சொன்னது என்னாச்சு? அனல் பறக்கும் டெல்லி

டெல்லி பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக கருதப்பட்டது மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை வழங்கும் “மகிளா சம்ரிதி யோஜனா திட்டம்”. இத்திட்டம் எப்போது தொடங்கும் என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி.

Mar 5, 2025 - 11:29
Mar 5, 2025 - 12:25
மகளிருக்கு மாதம் ரூ.2500: சொன்னது என்னாச்சு? அனல் பறக்கும் டெல்லி
Mahila Samriddhi Yojana

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகை உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக பல்வேறு கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தி, முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இறுதியாக தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000- த்தினை பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கத் தொடங்கி தற்போது வரை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தினைப் பார்த்து மற்ற மாநிலங்களும் தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கான உரிமைத் தொகையினை அறிவிக்கத் தொடங்கியது. கர்நாடகா, மகாராஷ்டிராவினைத் தொடர்ந்து டெல்லித் தேர்தலிலும் இந்த வாக்குறுதி வாக்காளர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. சமீபத்தில் நடைப்பெற்று முடிந்த டெல்லி தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. டெல்லி பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக கருதப்பட்டது மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை வழங்கும் “மகிளா சம்ரிதி யோஜனா திட்டம்”. இத்திட்டம் எப்போது தொடங்கும் என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியதோடு, தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகிறது.

காற்றில் பறந்ததா வாக்குறுதி?

அந்த வகையில், இன்றைய தினம் பாஜக தலைமையிலான டெல்லி அரசு மகிளா சம்ரிதி யோஜனாவை செயல்படுத்துவதில் தாமதம் செய்வதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி (AAP) பிரமுகரான ரிதுராஜ் ஜா, கட்சித் தொண்டர்களுடன் ஐடிஓ மேம்பாலத்தில் பேனர் ஒன்றினை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

இதுக்குறித்து அவர் கூறுகயில் "ஜனவரி 30 ஆம் தேதி துவாரகாவில் நடந்த ஒரு பேரணியின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கணக்குகளுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்தார். மகளிர் தினத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், (மார்ச் 8 ஆம் தேதி) அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கணக்குகளிலும் ரூ.2,500 வரவு வைக்கப்படும்" என்று அவர் கூறினார். இந்த வாக்குறுதி எப்போது நிறைவேறும் என பெண்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கையினை எடுக்காமல் பாஜக காலம் தாழ்த்துவதாக ரிதுராஜ் ஜா குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: உடல் பருமனால் அவதிப்பட போகும் இந்தியர்கள்: லான்செட் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

முன்னதாக டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அதிஷி, ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தினை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தகக்து.

பாஜக தரப்பு கூறுவது என்ன?

பாஜக எம்பி மனோஜ் திவாரி, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று “மகிளா சம்ரிதி யோஜனா திட்டம்” திட்டத்திற்கான பதிவு செயல்முறை மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்தார். பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்கும் செயல்முறை ஒன்றரை மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதியளித்தபடி, புதியதாக பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு எவ்வித ஒப்புதலும் அளிக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலத் தாமதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் முந்தைய ஆம் ஆத்மி அரசு கருவூலத்தை காலியாக விட்டது தான் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா உறுதியளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow