மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு: பங்கேற்ற 56 கட்சிகள்- முதல்வர் மொழிந்த தீர்மானங்கள் என்ன?

தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது.

Mar 5, 2025 - 13:17
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு: பங்கேற்ற 56 கட்சிகள்- முதல்வர் மொழிந்த தீர்மானங்கள் என்ன?
MK stalin

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அஇஅதிமுக, பாமக, காங்கிரஸ், விசிக உட்பட 56 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026 ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி. மத்திய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது வரை எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மத்திய அரசின் சார்பில் வழங்கப்படவில்லை.

தென் மாநிலங்களுக்கு பிரச்சினையா?

 "மாநிலங்களின் மக்கள் தொகை"-க்கு ஏற்ப தொகுதிகளின் மறுசீரமைப்பு வரையறை செய்யப்படும் பட்சத்தில், தமிழகத்திற்கான நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை குறையவோ? அல்லது வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கவோ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதில் எதுவாக இருப்பினும் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் அனைத்திற்கும் பாதகமாக அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தான் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

பாஜக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில்  பெரும்பாலான முக்கிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள் பின்வருமாறு-

• இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான "நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.

30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

• நாட்டின் நலனுக்காக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

• மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

• தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

• இக்கோரிக்கைகளைத் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக்கூட்டம் முன்வைக்கிறது.

• இக்கோரிக்கைளையும், அவைசார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் - தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது” எனத் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Read more:

champions Trophy 2025: ஒரே நாளில் ரோகித், கோலி, ராகுல் அடுத்தடுத்து சாதனை!

மகளிருக்கு மாதம் ரூ.2500: சொன்னது என்னாச்சு? அனல் பறக்கும் டெல்லி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow