champions Trophy 2025: ஒரே நாளில் ரோகித், கோலி, ராகுல் அடுத்தடுத்து சாதனை!
லாங்-ஆஃபில் கில் கேட்சை பிடித்த பிறகு பந்தை மிக விரைவாக விடுவித்ததற்காக கள நடுவர்களிடமிருந்து கில் எச்சரிக்கையைப் பெற்றார்.

துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டியில், விராட் கோலியின் 84 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. இதன் மூலம் ஐசிசி தொடர்களின் நாக்- அவுட் போட்டிகளில் 5 வது முறையாக ஆஸ்திரேலியாவினை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது இந்தியா அணி.
மற்றொரு அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்துக்கின்றன. இதில் வெற்றிப் பெறும் அணி துபாயில் நடைப்பெறும் இறுதி போட்டியில் இந்தியாவினை எதிர்க்கொள்ளும். இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை இனி காணலாம்.
முதல் கேப்டன்: ரோகித்துக்கு கிடைத்த பெருமை
நேற்றைய அரையிறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் முன்னேறியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதில் சுவாரஸ்யாம் என்னவென்றால் ஐசிசி கோப்பைக்கான 4 விதமான தொடர்களிலும் இறுதிப்போட்டிக்கு நுழைந்த முதல் கேப்டன் என்கிற பெருமை ரோகித்துக்கு கிடைத்துள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸிப் (2023)
ஒருநாள் உலகக்கோப்பை போட்டி (2023)
டி20 உலகக்கோப்பை(2024)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2025)
டாஸ் தோல்வி: மீண்டும்..மீண்டுமா?
நேற்றைய ஆட்டத்திலும் இந்தியா அணி டாஸ் தோற்றது. இது ஏதோ முதல் முறை, இரண்டாவது முறையல்ல..தொடர்ந்து 14 வது முறையாக இந்தியா அணி டாஸ் தோற்றுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக டாஸ் தோற்ற அணியாக இந்தியா திகழ்கிறது. அதேப்போல் இந்தியா அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தொடர்ந்து 11 வது முறையாக டாஸ் தோற்றுள்ளார். டாஸ் தோல்வியின் போது ரோகித் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியது. ”டாஸ் வென்றால்..பேட்டிங் செய்வதா அல்லது பந்து வீசுவதா என்கிற குழப்பம் என்னிடம் இருந்தது. இரண்டு விதமான மனநிலையில் இருக்கும்போது, டாஸை இழப்பது நல்லது" என்று ரோகித் டாஸ் இழப்பு குறித்து பதிலளித்தார்.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அதிக முறை டாஸ் தோற்ற கேப்டன்களின் பட்டியலில் ரோகித் ஷர்மா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டியில் அதிக முறை டாஸ் தோற்ற கேப்டன்கள்:
12 - பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள், அக்டோபர் 1998 முதல் மே 1999)
11 - பீட்டர் போரன் (நெதர்லாந்து, மார்ச் 2011 முதல் ஆகஸ்ட் 2013 வரை)
11*- ரோஹித் சர்மா (இந்தியா, நவம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை)
ஆஸ்திரேலியாவிற்காக களமிறங்கிய 21 வயது இளைஞர்:
நேற்றைய தினம் யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியா அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கூப்பர் கானோளி (Cooper Connolly), தன்வீர் சங்கா (Tanveer Sangha) ஆகியோர் மாற்று வீரர்களாக ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றனர். இதில் கூப்பர் நேற்றைய போட்டியின் மூலம் எலைட் லிஸ்டில் இணைந்துள்ளார். அதாவது ஐசிசி ஒருநாள் தொடர்களில் ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய மிக இளம் வயது வீரர்கள் பட்டியலில் ஒருவராக இணைந்துள்ளார்.
ICC ODI- ஆஸ்திரேலியாவிற்காக களமிறங்கிய இளம் வீரர்கள்
20y 225d - ஆண்ட்ரூ ஜெசர்ஸ் vs இந்தியா, டெல்லி, CWC 1987
21y 66d - ரிக்கி பாண்டிங் vs கென்யா, விசாகப்பட்டினம், CWC 1996
21y 90d - ஷேன் வாட்சன் vs நியூசிலாந்து, கொழும்பு SSC, CT 2002
21y 194d - Cooper Connolly vs இந்தியா, துபாய், CT 2025
21y 231d - மிட்செல் மார்ஷ் vs இங்கிலாந்து, எட்ஜ்பாஸ்டன், CT 2013
21y 264d - ஸ்டீவன் ஸ்மித் vs ஜிம்பாப்வே, அகமதாபாத், CWC 2011
பெரிதும் எதிர்ப்பார்ப்போடு களமிறக்கப்பட்ட இளம் வீரர் கூப்பர் கானோளி வந்த வேகத்தில் பெவிலியன் சென்றார். 9 பந்துகளை எதிர்க்கொண்டும் ரன் எதுவும் எடுக்காமல் ஷிமி பந்து வீச்சில் அவுட்டாகி நடையை கட்டினார். இருப்பினும் தனது சுழலில் ரோகித் ஷர்மா விக்கெட்டினை வீழ்த்தி தன்னை தேர்ந்தெடுத்தமைக்கு நியாயம் கற்பித்தார்.
கேட்ச் ஒழுங்கா பிடிங்க பாஸ்: அம்பயர் கொடுத்த எச்சரிக்கை
ஆஸ்திரேலியா அணியின் முதல் விக்கெட்டுக்குப் பிறகு, இந்தியாவின் தலைவலி என வர்ணிக்கப்படும் டிராவிஸ் ஹெட் வேகப்பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தார். தலைவலிக்கான ஜண்ட் பாம்-ஆக வந்த வருண் சக்ரவர்த்தி ஹெட் விக்கெட்டை அசால்டாக வீழ்த்தினார். இங்கு தான் ஒரு ட்விஸ்ட் நடந்தது. ஹெட் அடித்த பந்தை ஷுப்மான் கில் தான் கேட்ச் பிடித்தார். விக்கெட் வீழ்ந்தது என ரசிகர்களும், வீரர்களும் துள்ளிக்குதிக்கும் வேளையில் லாங்-ஆஃபில் கேட்சை பிடித்த பிறகு பந்தை மிக விரைவாக விடுவித்ததற்காக கள நடுவர்களிடமிருந்து கில் எச்சரிக்கையைப் பெற்றார். MCC சட்டங்களின்படி, பந்தைத் தொட்ட பிறகு, பீல்டர் பந்தின் மீதும், தனது சொந்த இயக்கத்தின் மீதும் முழு கட்டுப்பாட்டைப் பெற்றால் மட்டுமே, ஒரு கேட்ச் முழுமையானதாகக் கருதப்படும். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இருந்தாலும் அது அவுட் என்பதால் ஹெட் பெவிலியனுக்கு நடையை கட்டினார்.
விரைவாக 3000 ரன் கடந்த 3-வது வீரர்:
ஒருபுறம் கோலி பொறுமையாக களத்தில் நிற்க, மறுபுறம் ஸ்ரேயாஸ், ராகுல், ஹார்த்திக், அக்ஷரும் தங்கள் பணியை கச்சிதமாக செய்தனர். நேற்றைய போட்டியின் போது ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை கடந்தார் ராகுல். ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக குறைந்த போட்டிகளில் விரைவாக 3000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையினை பெற்றார் ராகுல்.
தவான் - 72 போட்டிகள்
கோலி- 75 போட்டிகள்
ராகுல்- 78 போட்டிகள்
விராட் கோலி நேற்றைய போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளார். ஐசிசி தொடர்களில் அதிக அரைசதம் விளாசிய வீரர் என்கிற பட்டியலில் சச்சினை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
Aus vs Ind: ஐசிசி தொடர்களில் யார் கை ஓங்கியுள்ளது? முடிவுக்கு வருகிறதா ரோகித் தலைமை?
உடல் பருமனால் அவதிப்பட போகும் இந்தியர்கள்: லான்செட் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்
What's Your Reaction?






