+2 ஃபெயில்.. மாணவர்களே டோண்ட் ஒர்ரி.. மன நல ஆலோசனை தரும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை

May 6, 2024 - 16:56
+2 ஃபெயில்.. மாணவர்களே டோண்ட் ஒர்ரி.. மன நல ஆலோசனை தரும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை

2023-2024-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 51 ஆயிரத்து 919 மாணவ, மாணவியர்கள் தோ்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத மாணவர்களை மனச்சோர்வில் இருந்து காக்க மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. 

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் ‘104’ தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் வாயிலாக பொதுமக்களுக்கு உடல்நலம் குறித்த அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் தேவைப்படும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று 14416 அழைப்பு மையம் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட மனநல ஆலோசனை பெறுவதற்காக உருவாக்கப்பட்டது.  

இந்நிலையில் 2023-2024-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகள் தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை பெறும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதன்படி சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ‘104’ தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம், 10 இருக்கைகளுடன், 30  மனநல ஆலோசகர்களைக் கொண்டும், ‘14416’ நட்புடன் உங்களோடு மனநல சேவை மையமானது 10  இருக்கைகளுடன் மனநல ஆலோசகர்கள், 4 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள் மற்றும் ஒரு மனநல மருத்துவரைக் கொண்டும் செயல்படுகிறது.

மேலும், ‘14416’ நட்புடன் உங்களோடு மனநல இரண்டாம் சேவை மையமானது, கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனையில், 10 இருக்கைகளுடன் 30  மனநல ஆலோசகர்கள், 3 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள், மற்றும் ஒரு மனநல மருத்துவரைக் கொண்டும் செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் செயல்படுவர்.

இங்கு அதிக மனஅழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்படும் மாணவர்களுக்கு, தொலைபேசி அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக மாவட்ட மனநல திட்டத்தின் கீழ், மனநல உளவியலாளர்கள், மனநல மருத்துவர், சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரும் மனஅழுத்தத்திருந்து விடுபட்டு நல்வாழ்வு அமைந்திட ஆலோசனை வழங்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow