நீட் ஆள்மாறாட்டம்... நாடு முழுவதும்  50 பேர் கைது.. விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை!

ராஜஸ்தானில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. 

May 6, 2024 - 16:29
May 6, 2024 - 16:31
நீட் ஆள்மாறாட்டம்... நாடு முழுவதும்  50 பேர் கைது.. விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை!

நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடந்த நிலையில், ராஜஸ்தானின் பரத்பூரில் மாஸ்டர் ஆதித்யேந்திர பள்ளியில் அமைந்த தேர்வு மையத்தில் இளநிலை மருத்துவ மாணவரான ராகுல் குர்ஜார் என்பவர், ரூ. 10 லட்சம் கொடுத்து மருத்துவ மாணவர் அபிஷேக் குப்தாவை ஆள்மாறாட்டத்தில் ஈடுபட வைத்துள்ளார். இதனை தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் கண்டறிந்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். 


தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த ஆள்மாறாட்ட மோசடியில் ஐவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தேர்வர் ராகுல் குர்ஜார், மருத்துவ மாணவர்கள் அபிஷேக் குப்தா, அவரது நண்பர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் 

இந்த சூடு அடங்குவதற்குள் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் புகார்கள் எழவே,  இதுகுறித்து தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. 

அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு தேர்வு கூடத்தில், இந்தி மொழியில் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு ஆங்கில வினாத்தாள் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக கண்காணிப்பாளர்கள் மாற்றிக்கொடுத்தும் அந்த மாணவர்கள் வினாத்தாள்களுடன் தேர்வறையில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.. 

தேர்வு எழுதாமலேயே வெளியேறிய மாணவர்கள் வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் கசியவிட்டதாகவும், ஆனால் அதற்குள் அனைத்து நீட் தேர்வு மையங்களிலும் தேர்வுகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் தேர்வுக்கு முன்னே வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதனிடையே மும்பையில் நீட் தேர்வின் போது ஆள்மாறாட்டம் செய்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களில் வினாத்தாள் வெளியான புகாரில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பீகாரில் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow