இலவச வீட்டு மனைப் பட்டா எங்கே..? தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு...!
தஞ்சாவூர் அருகே இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கியதில், திமுக ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள், இதைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கச்சமங்கலம் கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தக் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் திமுக எம்.எல்.ஏ., துரைசந்திரசேகரன் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் வழங்கிய பட்டாவின் அளவில் மாறுதல் இருந்தாக கூறப்படுகிறது. சிலருக்கு 1 சென்ட் முதல் 3 சென்ட் வரை வித்தியாசம் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கராஜனிடம் ஒரே மாதிரியான அளவில் பட்டா வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் ஊராட்சி மன்றத் தலைவரோ பட்டாக்களை அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், பல மாதங்கள் ஆகியும் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது சம்பந்தமாக அரசு அதிகாரிகள், முதலமைச்சர் குறைதீர் பிரிவு என பல்வேறு இடங்களில் கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை என புகார் கூறுகின்றனர்.
அதே சமயம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக உள்ள நபரின் குடும்பத்திற்கு மட்டும் தற்போது 3 சென்ட் இலவச பட்டா வழங்கப்பட்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தங்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி வீடு கட்டித் தரவில்லை என்றால் அனைவரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
What's Your Reaction?