புதுமைப் பெண் திட்டம்.. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டித்து அரசாணை..
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000
புதுமைப் பெண் திட்டத்தை, அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கும் நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவிகள், உயர்கல்வியில் சேர்வதை அதிகரிக்கும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு, இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் படித்து அரசுக் கல்லூரி, அரசு உதவிபெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வரும் இந்த திட்டம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும் என கடந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், புதுமைப் பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் நீட்டித்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், கூடுதலாக 49,664 மாணவிகள் பயன்பெறுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக 2024-2025 நிதியாண்டில் கூடுதலாக ரூ.35.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?